Thursday, March 12, 2009

BRAHMAN THALAM PODA - KONJUM SALANGAI

Ranganathan Kothandaraman  writes :

காட்சி ஒன்று:

சிக்கல் சண்முகசுந்தரத்திற்கு உயிர் கொடுத்த சிவாஜி கணேசனை எப்படி மறக்க முடியும்? அவர் நாதசுர இசை தத்ரூப அபிநயத்தை வியந்து, வேறு எவராலும் இப்படி கொணர இயலுமா என்கிற கேள்வியும் இன்று வரை உண்டுதானே?

காட்சி இரண்டு:

’சபாஷ்! சரியான போட்டி’ என்கிற அதிரடி பி.எஸ்.வீ. சிரிப்புடன் தொடங்கும் போட்டி நடனத்தை எத்துணை முறை ரசித்துப் பார்த்திருக்கிறோம்? நாட்டியம் பயின்று, முறையான தேர்ச்சி பெற்ற இரு கலைஞர்களின் திறமையை வார்த்தைகளில் அடக்கி விட முடியுமா?

இப்படித்தான் நான் நினைத்திருந்தேன் இந்தப் படத்தைப் பார்க்கும்வரை. இந்தப் பாடலைப் பார்க்கும்வரை.

அமரேந்திரன் அரச வம்சத்தைச் சேர்ந்தவனாயினும், அது அறியாது புரோகிதரது வீட்டில் வளர்கிறான். அமரேந்திரனுக்குப் போர் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தாலும், நாதசுரத்தின் மேல் ஈடுபாடு கொள்கிறான். அதை நன்கு பயின்று ஆலயத்தில் தினமும் வாசிக்கத் துவங்குகிறான்.

இனிய குரல் வளம் கொண்ட சாந்தாவின் நட்பு அவனுக்கு கிட்டுகிறது. நாட்டியத் தாரகை மல்லிகா மீது காதல் கொள்கிறான். சூழ்நிலை காரணமாய் மல்லிகா, ஆஸ்தான நாட்டியக் கலைஞருடன் போட்டி நடனம் ஆட நேரிடுகிறது. சூழ்ச்சியில் சிக்கி, மல்லிகா தோல்வியை தழுவும் நேரத்தில் அமரேந்திரனின் நாதசுர இசை அவளைக் காப்பாற்றி, வெற்றி கொள்ளச் செய்கிறது.

’பிரம்மன் தாளம் போட’ எனத் துவங்கும் இந்தப் பாடல் முழுவதும் சாஸ்த்ரீய சங்கீதத்தில் அமைக்கப்பட்டு, நடனத்துக்கும், இசைக்கும், கடைசி இரண்டு நிமிடங்களில் நாதசுர இசைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது நோக்கத்தக்கது. பத்து நிமிடங்கள் கொண்ட இந்த நடனப்பாடல் நம் மனதைக் கொள்ளை கொள்ள பல காரணங்கள் இருந்தாலும், பாடலின் காட்சியமைப்பு, பாடல் உருவான செட் எனப்படும் வடிவமைப்பு நம் கண்களைக் கவர்கின்றன. வண்ணத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தின் நாட்டிய நாயகிகள் இருவரும் நாட்டியத்தை முறையாகப் பயின்றவர்கள் என்பது பாடலின் தரத்தை உயர்த்துகிறது. அவர்களது போட்டி நடனம், வைஜயந்தி மாலா - பத்மினி நடனப் போட்டிக்குச் சற்றும் குறைந்ததல்ல.

ஜெமினி தோன்றும் இறுதி இரு நிமிடங்கள், அநாயாசமாய் நாதசுரத்தை அவர் கையாளும் பாணி சிக்கல் சண்முகசுந்தரத்திற்குச் சற்றும் குறைந்ததல்ல.

படம்: கொஞ்சும் சலங்கை (1962)
பாடல்: பிரம்மன் தாளம் போட
கலைஞர்கள் : குமாரி கமலா, குசலகுமாரி, ஜெமினி கணேசன், சாரங்கபாணி
எழுதியவர்: கு.மா. பாலசுப்ரமணியம்
பாடியவர்கள்: சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, (ராதா) ஜெயலக்ஷ்மி
இசை: எஸ். எம். சுப்பையா நாயுடு, காரைக்குறிச்சி அருணாச்சலம்

பி.கு:

1. நாதசுரத்துடன் அமைந்த காட்சிகளில் ஜெமினியாரின் முத்திரை நடிப்பு அபாரம். எவ்வித அலட்டலும் இன்றி அவர் ஏற்கும் பாத்திரத்தைக் கையாள்வதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், நாதசுரத்தையும் அப்படியே கையாண்டதைப் பார்த்து அசந்தே போனேன்.

2. (மெய்யாலுமே வாசித்த) நாதசுர வித்வான் காரைக்குறிச்சி அருணாசலத்திற்குச் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1525209024177485/

No comments: